search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரி"

    • சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளது. இங்கு விபத்து, கொலை, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் உடல்களை பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து காவல் துறை விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் 24 சடலங்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பாதுகாக்க வசதி உள்ளது. இதுபோன்ற சூழல்களில் தற்போது அடிக்கும் வெயிலில் பிணவறையில் அமைக்கப்பட்ட குளிர்சாதன எந்திரங்கள் திணறுவதால், குளிரூட்டப்படுவது குறைகிறது.

    இதனால் சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சடலங்கள் அழுகுவது, துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள 3 குளிர்சாதன எந்திரங்களை சரி பார்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிர்சாதன எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் நிலைமை சீராக வில்லை. குறிப்பாக புதுச்சேரிக்கு வந்து ஆதரவற்றவர்களாக இறந்து கிடப்போரின் சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக 15 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியுள்ளது.

    தற்போது பிணவறையில் ஆதரவற்றவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு போதுமான குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-

    தற்போது கடும் வெயிலால் பிணவறையில் குளிர் சாதன எந்திரங்கள் திணறுகிறது. மேலும் வெளிப்புற வெப்பமும் பிணவறைகளில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் சீதோஷ்ண நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, எந்திரங்களை சர்வீஸ் செய்துள்ளோம். தற்போது ஓரளவு நிலைமை சீராகியுள்ளது. இருப்பினும் சடலங்கள் அழுகுவது என்பது, ஆதரவற்றவர்களின் சடலங்களால்தான் நிகழ்கிறது.

    இத்தகைய சடலங்கள் இறந்து, 10 நாட்கள் அல்லது அதற்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஏற்கனவே அழுகிய நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் இத்தகைய சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக விதிப்படி 15 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.

    அப்படி நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும்போது சடலங்கள் மேலும் அழுகி விடுகிறது. இருப்பினும் வெளிப்புற சீதோஷ்ண நிலை உள்ளே பாதிக்காத வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரசவ அறையுடன் ஒரே மாடி கொண்ட அரசு ஆரம்ப மருத்துவமனை கட்டப்பட்டது.
    • கிராம மக்கள் பிரசவங்களுக்கு இந்த மருத்துவமனையை விரும்புவதில்லை.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரிவில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பீதார் மாவட்டத்தின் பகடல் கிராமம்.

    சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முழு வசதியுடன் கூடிய பிரசவ அறையுடன் ஒரே மாடி கொண்ட அரசு ஆரம்ப மருத்துவமனை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மருத்துவனையில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.

    இதற்கு காரணம் இம்மருத்துவமனை கட்டிடமானது கல்லறைக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளதாகும்.

    கல்லறைக்கு அடுத்துள்ள கட்டிடத்தில் பிறக்கும் குழந்தைகள் இறுதியில் பேய்களாக சுற்றித்திரியும் என்ற மூடநம்பிக்கையால் கிராம மக்கள் பிரசவங்களுக்கு இந்த மருத்துவமனையை விரும்புவதில்லை. மாறாக 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முந்தைய மருத்துவமனை கட்டிடத்திற்குச் செல்கின்றனர்.

    கல்லறைக்கு அருகில் உள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதால் மருத்துவமனை கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. குறைந்த படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான வார்டுகள் மற்றும் பிரிவுகள் கல்லறையை எதிர்நோக்கியே உள்ளன.

    இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தீப் கோடே கூறுகையில், இந்த சுற்றுவட்டாரத்தில் சிறந்த வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையாக இருந்தாலும் குழந்தைகள் பிரசவத்திற்காக யாரும் இங்கு வருவதில்லை. 2 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் குறைந்தது 20 கிராமங்களுக்கு சேவை செய்யும் வகையில் கட்டப்பட்டு உள்ளது என்றார்.

    பீதார் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ஞானேஷ்வர் நிட்கோட் கூறுகையில், புதிய மருத்துவமனையை அச்சமின்றி பயன்படுத்துமாறு கிராம மக்களை கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இருப்பினும் காய்ச்சல், சளி மற்றும் பிற அடிப்படை நோய்களுக்காக வெளிநோயாளிகள் பிரிவுக்கு செல்கின்றனர் என்றார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் காஞ்சிபுரத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காஞ்சிபுரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த ஆஸ்பத்திரியில்அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதி கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றும் பாட்டிலை தொங்கவிட உரிய ஸ்டாண்டு இல்லாததால் அதனை துடைப்பத்தின் நுனியில் கட்டி வைத்து பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மருத்துவ கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்தியில் நிலவும் இந்த நிலை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. நோயாளிகளுக்கான படுகையிலும் போதிய வசதிகள் இல்லை. குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக ஏற்றும் மருந்துகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் ஸ்டாண்டுகள் பெரும்பாலான படுக்கைகளில் இல்லை.

    இதனால் தரையை துடைக்க பயன்டுத்தும் துடைப்பத்தின்(மாப்)பின் அடிப்பகுதியில் உள்ள துணியை நீக்கி விட்டு அதன் கம்புகளை மட்டும் நோயாளிகளின் படுக்கையுடன் கட்டி வைத்து உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக செலுத்தும் மருந்து பாக்கெட்டுகளை தொங்கவிட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    பல நோயாளிகளின் படுக்கையில் இந்த துடைப்ப நுனி கட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அங்குள்ள மின்விளக்கு சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது.


    கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் போதிய படுக்கை இல்லாததால் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் சிரமம் அடையும் நிலை ஏற்பட்ட உள்ளது.

    இது தொடர்பாக காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, காய்ச்சல் வார்டில் ஒவ்வொரு படுக்கையிலும் குளுக்ககோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை தொங்க விட துடைப்பத்தின் நுனிகள் மட்டுமே உள்ளன. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் எந்த பதிலும் கூறுவதில்லை. ஆஸ்பத்தரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

    செய்யூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறும்போது, துடைப்பத்தின் கீழ்பகுதியில் உள்ள துணி இருந்த பகுதியை அகற்றி விட்டு அதனை ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். நோயாளிகளின் படுக்கையில் இந்த நுனிகளில் சரியாக கட்டப்படாமல் சரிந்து விழுகிறது. எனக்கு குளுக்கோஸ் அந்த துடைப்பத்தின் கம்பில் கட்டிதான் ஏற்றினார்கள். நான் கைகளை அசைக்கும் போதெல்லாம் அது நழுவி என் மீது விழுந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறும்போது:-

    காய்ச்சல் வார்டில் கொசுவலை கட்டுவதற்காக துடைப்பத்தின் கம்புகளை சிலர் பயன்படுத்தி உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகள் தொங்க விட்டு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கு 32 ஸ்டாண்டுகள் உள்ளன என்றார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில்

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. ஆனால் காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

    இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பாதித்து வருபவர்களுக்கு தனித்தனி வார்டு இல்லாததால் அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்றனர்.

    • உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள பெருமாம்பட்டி, கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 25). வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள். நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அன்று இரவு மணிமேகலைக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை நேற்று இரவு திடீரென இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கூடியதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இது குறித்து உறவினர்கள் கூறும் போது, பயற்சி டாக்டர் மூலம் மணிமேகலைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்தான் இறந்து போனார். மேலும் அறுவை சிகிச்சை செய்தது முதல் மணிமேகலையை பார்க்க டாக்டர்கள், ஊழியர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டபோதே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றோம் என்று கூறியும் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    தொடர்ந்து இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இது பற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து கம்யூனிட்டு கட்சியினர் உறவினர்களை அழைத்து சென்று இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு அளித்தனர்.

    இது குறித்து சண்முகம் கூறுகையில் நல்ல நிலையில் இருந்த பெண் திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது. தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே பெண் உயிர் இழந்து உள்ளார். எனவே மருத்துவ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணின் இறப்பிற்கு உரிய நீதி வேண்டும் என்றார்.

    • கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

    நந்திவரம் கூடுவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பெருவிழா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட பயனாளிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், கண்ணொளி காப்போம் திட்ட பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகள், ரத்த தானம் முகாமில் ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கூடுதல் இயக்குநர் சேகர், செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

    • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

    சின்னமனூர் அருகே பூலாநந்தபுரம், சீலைய ம்பட்டி, அப்பிப்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சி புரம், எரசை, மாா்க்கை யன்கோட்டை. குச்சனூர், அழகாபுரி. உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறு கின்றன.

    மது அருந்துதல், கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    இதனால் உடனடியாக இந்த அரசு ஆஸ்பத்திரி நுழைவாயில் பகுதி 2 கேட்டிற்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
    • ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு, பெண்கள் உள் நோயாளிகளின் பிரிவு. குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களுக்கு கலெக்டர் கலைச் செல்வி மோகன் அறிவுரை வழங்கி, மருந்தகத்தில் மருந்துகள் இருப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர்- ஓரகடம் கூட்டு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    • அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வைரஸ் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர டெங்கு காய்ச்சல் வார்டில் 4 பேரும், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் தேவூர் அருகே மாற்று திறனாளி வெங்கடேஷ் (28) என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு சந்திப்பில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.
    • மேல் சிகிச்சைக்காக களியங்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இரணியல் :

    பூதப்பாண்டி பட்டார்குளம் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49). இவர் தக்கலை அரசு மருத்துவமனையில் பதிவறை எழுத்தராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 31-ந்தேதி காலை வேலைக்கு செல்வதற்காக பூதப்பாண்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு சந்திப்பில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பனுக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக களியங்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அய்யபபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி வேணி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி காரை ஒட்டி வந்த ரொனால்டினோ மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    • பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
    • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெரும்பாலானோருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல், உடல்வலி இருக்கிறது.

    காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தினமும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.

    குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலானோர் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

    ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளி வாயில் சாவடி, வாயலூர், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு ,தேவம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் காணப்பட்டு வருகின்றன.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்குகாய்ச்சல் வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பரவலை தடுக்க பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டு உள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.

    இப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு ஏற்படுதல் என இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×